இலங்கை

மட்டக்களப்பு வாவியை ஆக்கிரமித்துள்ள ஆற்றுவாழையை அகற்றும் பணி

Published

on

மட்டக்களப்பு வாவியை ஆக்கிரமித்துள்ள ஆற்றுவாழையை அகற்றும் பணி

மட்டக்களப்பு வாவியின் ஒரு பகுதியாகவுள்ள, பட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதியை மூடியுள்ள ஆற்றுவாழை தாவரங்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆற்றுவாழை தாவரங்கள் பாலத்தை முற்றாக மூடியுள்ளதால் மட்டக்களப்பு வாவியில் நன்நீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியாமல் கடந்த 3 மாதங்களாக மிகவும் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி அதிகரித்துள்ளது. எனினும் ஆற்றுவாழை தாவரங்கள் வாவியில் நிலைகொண்டுள்ளதனால் வெள்ளநீர் வழிந்தோடுவதற்கும் அது பெரும் தடையாக அமைந்ததனால் பெரும்பாலான வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, இதனால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த விடயம் குறித்து அப்பகுதி நன்நீர் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும், முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க உடன் விரைந்து செயற்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் வாவியை ஆக்கிரமித்துள்ள ஆற்றுவாழை தாவரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்கிணங்க நட்டாற்றில் தற்காலி படகு மூலம் பெக்கோ இயந்திரத்தினூடாக ஆற்றில் நிலைகொண்டுள்ள ஆற்றுவாழைத் தாவரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்றிலிருந்து(14.12.2023) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த ஆற்றுவாழைத் தாவரங்களால் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்ததாவும், தமது கோரிக்கைக்கு இணங்க இதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக இதன்போது அப்பகுதி கடற்றொழிலாளர்களும் விவசாயிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நீர்ப்பாசன அமைச்சு தொடர்பான கூட்டத்தின்போது இந்த விடயம் குறித்து கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் எடுத்துக்கூறியதற்கிணங்க இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக இதன்போது கலந்து கொண்டிருந்த கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தனின் செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ந. நாகரத்தினம், நவகிரி பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் சு.கிசோகாந், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனுடைய இணைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version