இலங்கை

சிறையிலிருக்கும் ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட விருது

Published

on

சிறையிலிருக்கும் ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட விருது

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரான ஹேமந்த லியனபத்திரன, சிங்கள நாளிதழ் ஒன்றில் பணிபுரியும் போது, ஆற்றிய பங்களிப்புகளுக்காக விசேட சந்தர்ப்பங்களின் கீழ் அறிக்கையிடுவதற்கான பேராசிரியர் கைலாசபதி விருதின் கீழ் சிறப்பு விருதைப் பெற்றுள்ளார்.

எனினும் கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஹேமந்த தற்போது குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தகவல் ஒன்றை பகிர்ந்ததன் மூலம் குற்றவாளியான ரமேஸ் என்பவருக்கு உதவியதாக தெரிவித்து ஹேமந்த கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற 24ஆவது பத்திரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வின் போது, ஹேமந்தவின் சார்பில் விருதைப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கை பத்திரிகை நிறுவனமோ, விருது வழங்கும் விழாவின் ஏற்பாட்டாளர்களான ஆசிரியர் சங்கமோ அவர் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்திருக்கவில்லை.

ஹேமந்தாவின் மனைவிக்குக் கூட அவர் இப்படி ஒரு விருது கிடைத்திருப்பது தெரியாது என்று கூறப்படுகிறது.

இதேவேளை, பாதாள உலக பிரமுகரான ரமேஸூடன் ஹேமந்த தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் விசாரணைகள் இரண்டரை மாதங்கள் கடந்த பின்னரும் முழுமையடையவில்லை என பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, ஹேமந்தவின் மனைவியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

Exit mobile version