இலங்கை

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அறிவிப்பு

Published

on

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் கோவிட் அச்சுறுத்தல் காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பெறப்பட்ட பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாள் சம்பளத்தை மீளப்பெறல் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த பணம் அதிபர்கள், ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை பெறாதவர்கள் பெற்றுக்கொள்ளுமாறும் ஆசிரியர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அண்மையில் கோவிட் 19 தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் ஒரு நாள் சம்பளத்தினை ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனுமதி இன்றி பெற்றுக் கொண்டமை தொடர்பாக நாங்கள் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தோம்.

இது அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு. இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஆகிய பொன்னுத்துரை உதயரூபன், பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அத்தோடு நமது தலைவர் பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தாக்கலில் சட்டமா அதிபரும் பிரதிவாதியாக குறிப்பிட்டதன் காரணமாக சட்டமா அதிபர் அண்மையில் இது தொடர்பாக சம்மதம் தெரிவித்ததோடு, ஒரு நாள் பெற்றுக்கொண்ட பணத்தினை திருப்பி செலுத்துவதாக உயர் நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கப்பட்டது.

அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் அதிபர்கள், ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மிகக் கூடிய பணத்தொகையாக திருகோணமலை கல்வி வலயத்தில் 2.895 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2.795 மில்லியன் ரூபாவும் கல்முனை கல்வி வலயத்தில் 3.846 மில்லியன் ரூபாவும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணத்தினை பெரும்பாலான ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டுள்ளதோடு, பெற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களும் கல்வி திணைக்களத்தின் உடைய கல்வி பணிப்பாளர்களையோ அல்லது அங்குள்ள கணக்காளர்களையோ சந்தித்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தப் பணத்தினை ஓய்வு பெற்றவர்களும் அரசாங்க ஊழியர்களும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகலரும் குறிக்கப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.” என்றார்.

 

Exit mobile version