இலங்கை

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக இலங்கையின் மின்தடை

Published

on

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக இலங்கையின் மின்தடை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோகத் தடை வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

பல மணி போராட்டத்தின் பின்னர் இரவு 11 மணிக்கு நாடு முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாட்டை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முறையான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக நேற்று பிற்பகல் நீர் விநியோகம் தடைப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களில் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும், தொடருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின் தடை காரணமாக விக்டோரியா, பொல்கொல்ல, ரன்தெனிகல மற்றும் ரன்தம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பிற்பகல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு பல சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

Exit mobile version