இந்தியா

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பான தி.மு.க எம்.பி தமிழச்சியின் கருத்துக்கு கண்டனம்

Published

on

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பான தி.மு.க எம்.பி தமிழச்சியின் கருத்துக்கு கண்டனம்

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்காக மறைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் மன்னிப்புக் கேட்பதாக தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறிய கருத்துக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செவ்வியொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அதில், நீங்கள் எந்த வரலாற்று ஆளுமையுடன் அமர்ந்து உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்று கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதன்போது இந்த கேள்விக்கு பதிலளித்த அவர், மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றும் பதிலளித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து அவரிடம் என்ன பேசுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு மன்னிப்பு கேட்பேன்” என்றும் பதிலளித்துள்ளார்.

இலங்கை முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது 2009 ஆம் ஆண்டு நாட்டின் உள்நாட்டுப் போரின் போது பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கின்றது.

தமிழச்சி தங்கப்பாண்டியனின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரமங்கலம் தனது X பக்கத்தில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பான ஐ.நா குழு அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார்.

அதில் விடுதலைப்புலிகள் இயக்கம் “பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுத்ததாகவும், தொடர்ந்து மனித தடுப்புகளாக இருந்ததாகவும் கூறியுள்ளது.

மேலும், “இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரமும் தங்கபாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த நாளையொட்டி தமிழச்சி தங்கபாண்டியனின் பேட்டி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version