இலங்கை

சவேந்திர சில்வாவிற்கு எதிராக திரண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Published

on

சவேந்திர சில்வாவிற்கு எதிராக திரண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடை விதிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் பல்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சாவேந்திர சில்வா போர்க் குற்றச்செயல்கள் செய்து மனிதாபிமானத்திற்கு எதிராக செயற்பட்டமையால் அவருக்கு எதிராக தடை விதிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

இது தொடர்பிலான மனு ஒன்றில் கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஒவ்வொரு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு,

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும் கருதுவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டொனால் தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக கருதுகின்றனர் எனவும் உண்மையில் போர் முடிவுறுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பெரி கார்டினர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சாவேந்திர சில்வாவிற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென தாம் கருதுவதாகவும் அதற்கு ஆதரவினை வழங்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மெக்னொனாவ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் ஐரோப்பிய நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார்.

சாவேந்திரா சில்வாவிற்கு எதிரான தடையை ஆதரிப்பதாகவும், 2009ம் ஆண்டு போரின் போது அவர் பாரியளவு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தென்படுகின்றது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கெரத் தோமஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சாவேந்திர சில்வா பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், இலங்கைியல் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனட் டேபி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் விவகாரத்தில் எவ்வித நெகிழ்வுப் போக்கும் கிடையாது என்பதனை நிரூபிக்கக் கூடிய ஓர் சந்தர்ப்பம் இதுவெனவும், சாவேந்திராவிற்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version