இலங்கை

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை பணம்!

Published

on

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை பணம்!

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 04 பில்லியன் ரூபாவிற்கான காசோலை நேற்று(29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அவசியமான மருந்துப் பொருட்கள் கொள்வனவு, அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதியே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி 07 பில்லியன் ரூபாவில் 03 பில்லியன் ரூபா ஏற்கனவே ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டதோடு, அதற்கு இணையாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவும் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 3382 மில்லியன்களை வழங்கியிருந்தாலும் ஒரு வருடத்தில் 07 பில்லியன் ரூபாவை வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிகழ்வின்போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மூலம் கடந்த 18 மாதங்களில் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பணமாகப் பெற முடிந்ததாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும், தொழிலுக்காக வெளிநாட்டு செல்வோருக்காக விமான நிலையத்தில் தனியான பிரிவை அமைப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மனுஷ நாணயக்கார இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இந்தநிலையில், வெளிநாட்டு ஊழியர்களின் பணம் இலங்கைக்கு அந்நிய செலாவணி பெறுவதற்கான முக்கியமான மூலங்களில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையிலான அமைச்சின் வேலைத்திட்டத்தை பாராட்டியதுடன், புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக தொழிலாளர் சட்டங்களை திருத்த எடுக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளார்.

Exit mobile version