இலங்கை

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு

Published

on

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு

ஈழத்தமிழர்களின் முக்கியமான நாளொன்றான மாவீரர் நாளில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதாக கூறப்பட்ட காணொளி பலர் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த காணொளி மாவீரர் நாளான கடந்த (27.11.2023) ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதில் ஈழத்தமிழர்கள் மற்றும் இலங்கையின் அரசியல் கோட்பாடு தொடர்பில் பொதுவாக பேசப்பட்டது.

இந்த காணொளியில், தன்னை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என அறிமுகம் செய்துகொண்ட பெண் சுமார் 10 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அவர் பேசுகையில், “அரசியல் வழியில் தமிழீழத்திற்காக தொடர்ந்து பயணிப்போம். சிங்களத்திற்கு ஒருபோதும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

நாம் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். சவால்கள், ஆபத்துகளை தாண்டி நான் உங்கள் முன் தோன்றி இருக்கிறேன். தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிங்கள அரசு தனித்து நின்று போர் புரிய திராணி அற்றது.

தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. பண்பாட்டு சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன. ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை. ஐநாவும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை.

தமிழீழத்துக்காக போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. இத்தனை ஆண்டுகளாக நம்மோடு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழ் உறவுகளுக்கு நன்றி. நாம் சிங்கள மக்களுக்கும் எப்போதும் எதிரி இல்லை. அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் இல்லை. பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது,” என்று அவர் பேசியிருந்தார்.

பெரும்பாலானவர்கள் இந்த காணொளியில் உள்ளது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா அல்ல என்றும் இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறு இருப்பினும் இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் குறிப்பிடுகையில், இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தேவை ஏற்படின் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் காணொளி வெளியாகும் முன்னரே மாவீரர் தினத்தன்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பேசிய காணொளி வெளிவரும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் இந்த செய்தி, சர்வதேச நாடுகளிலிருந்து முற்றிலும் இலாபத்தை பெறும் நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தியின்படியே குறித்த மாவீரர் தினத்தில் துவாரகா பேசிய காணொளி வெளிவந்தது.

இந்த காணொளியில் பேசியது துவாராக இல்லை என்பதற்கு பல உதாரணங்களும் சான்றுகளும் முன்வைக்கப்படுகின்றன.

அதில் முதலாவது காணொளியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி நடை.

காணொளியில் ஈழத்தமிழ் தென்பட்டாலும் சில இடங்களில் ஈழத்தமிழுக்கு அப்பாட்பட்ட சொற்களும் உபயோகிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக மாநிலம் என்ற வார்த்தை அந்த காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி இலங்கையில் மக்கள் மாநிலம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது என்பது மிகவும் அரிதான ஒன்று.

அவ்வாறு இருக்கையில் மாநிலம் என்ற வார்த்தையை அதுவும் தமிழீழத்தின் முக்கிய அங்கம் வகித்த ஒருவர் எவ்வாறு இப்படி பேச முடியும் என நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அடுத்த பிரதான காரணமாக கூறப்படுவது முக பாவனை.

பேசும் போது வாய் அசைவிற்கும் உச்சரிப்புக்கும் இடையில் வேறுபாடு தோன்றுகின்றது.

ஒரு சாதாரண தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளமையால் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுவதாக தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் இந்த செயற்பாட்டுக்கு பின்னால் இந்தியா இருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. மேலும், இந்த காணொளி வெளியானதற்கு பின்புலத்தில் இலங்கை அல்லது இந்தியாவின் புலனாய்வுத்துறைகள் இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் முயற்சியாகவே இது பலராலும் பார்க்கப்படுகிறது.

காணொளியில் காட்டப்படும் பெண் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது, அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகின்றது என்று மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்தார்.

இதேவேளை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று இலங்கையில் உரையாற்றிய பெண், அவரது மகளே இல்லை என இந்தியாவை சேர்ந்த கார்ட்டூனிஸ்டு பாலா தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “ஒருவேளை தலைவர் மேதகுவின் மகள்தான் இவர் எனில் அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை. ஆனால், முகங்களின் ஒவ்வொரு பகுதியையும் கூர்ந்து ஆய்வு செய்யும் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக ஓவியனாக சொல்கிறேன். 200 சதவீதம் இரண்டு முகமும் ஒன்றல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் துவாரகாவின் வருகை தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version