இலங்கை

மத்திய வங்கிக்குள் திருடர்கள்: காணாமல் போன நிதி

Published

on

மத்திய வங்கிக்குள் திருடர்கள்: காணாமல் போன நிதி

மத்திய வங்கிக்குள் திருடர்கள் உள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது எனவும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன் ஆகியோருக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுமா ? எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (28.11.2023) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

“மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன் ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆகவே இவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுமா?”

மத்திய வங்கி அதியுயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது. அவ்வாறான நிலையில் மத்திய வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள நிதி காணாமல் போயுள்ளதை அலட்சியப்படுத்த முடியாது.

மத்திய வங்கிக்குள் அதியுயர் பாதுகாப்புக்கு மத்தியில் நிதி காணாமல் போகிறது என்றால் மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் சேவையில் இருந்து ஓய்வுப் பெறுவதற்கு முன்னர் ஆளுநர்களுக்கான சம்பளத்தை 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் இருந்து 4 இலட்சமாக அதிகரித்துக் கொண்டார். தனக்கான கொடுப்பனவுகளை உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஆகவே இவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது நியாயமானதா? மக்களின் வரிப்பணத்தை கொண்டு இவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்குவதை இடைநிறுத்த அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

“மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான கப்ரால்,லக்ஷ்மன் ஆகியோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு விங்குவது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர், சட்டமா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை அறிவிக்கிறேன்.

திடீரென கேள்வி எழுப்பும் போது அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க முடியாது.” என்றார்.

Exit mobile version