இலங்கை
நடைபெறாத தேர்தலுக்கு 940 மில்லியன் ரூபா செலவு
நடைபெறாத தேர்தலுக்கு 940 மில்லியன் ரூபா செலவு
நடைபெறாத ஒரு தேர்தலுக்கு நிர்வாக செலவாக 940 மில்லியன் ரூபா செலவு செய்ததாக கணக்கில் காட்டப்பட்டுள்ள விடயம் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் (28.11.2023) உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
”உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடைபெறாமல் 8 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பணமில்லை என்ற காரணம் கூ றப்பட்டிருக்கின்றது. அது வேறு விடயம்.
ஆனால் அந்த உள்ளூராட்சி சபையிலே வேட்பு மனு தாக்கல் செய்த பலர் அரச உத்தியோகத்தர்களாக இருக்கின்றார்கள். அதிகமானோர் வேலைக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் பலருக்கு இன்னும் அவர்களினுடைய பணம் கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு பலர் உள்ளனர். வேண்டுமென்றால் அவர்களினுடைய விபரங்களை என்னால் தர முடியும். தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த அனைவருக்கும் அவர்களினுடைய கட்டுப்பணங்கள் மீள கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.
அதே போல நடைபெறாத ஒரு தேர்தலுக்கு நிர்வாக செலவாக 940 மில்லியன் ரூபா செலவு செய்ததாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இது நான் பத்திரிகையில் பார்த்த விடயம். இவ்வளவு பொருளாதார நெருக்கடியில் வேட்பு மனுக்களை எடுப்பதற்காக 940 மில்லியன் ரூபாவை செலவு செய்வது என்பது ஒரு வீண் விரயமாக பார்க்கின்றேன்.
மிகப் பெரும் தொகையான பணம் விரையம் செய்யப்பட்டிருக்கிறது. பல சந்தர்ப்பத்திலே அரசியல்வாதிகள் விரயம் செய்கிறார்கள், ஊழல் செய்கிறார்கள், என்ற குற்றச்சாட்டுக்கள் தொகையாக வந்து கொண்டிருக்கும்.
இதில் பல அதிகாரிகள் செய்யும் ஊழல் விடயங்களினை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இவற்றையும் நிச்சயமாக பிரதமர் கவனிக்க வேண்டும்.
ஏனென்றால் அவர்களின் கீழே தான் முழுமையான அதிகார நிர்வாகம் இருக்கின்ற காரணத்தினால் பிரதமர் இந்த பொருளாதார மீட்சிக்கு செயல்பட்டு கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே பொருளாதார மீட்சி என்பது எல்லாருமே ஒத்துச் செய்ய வேண்டிய ஒரு விடயம்.
இவ்வாறு சிலர் செய்கின்ற பிழைகளால் பொருளாதாரம் வீழ்ச்சியிடைந்து கொண்டிருக்கிறது என்பது நிச்சயமான ஒரு விடயம்.
மேலும், மாகாண சபையை பற்றி சொல்லி இருக்கிறோம். அதை நடத்துவதற்கான கட்டாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என்றார்.