இலங்கை
ஓமானில் இலங்கைப் பெண்ணுக்கு சோகம்
ஓமானில் இலங்கைப் பெண்ணுக்கு சோகம்
ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 39 வயதான இலங்கைப் பெண் ஒருவர் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ குமாரகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஜே.ஏ.ஷிரோமி பிரதீப் ஜயக்கொடி என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பெண்ணான இவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்தப் பெண் தனது தாய், தந்தையருக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வேலை புரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உயிரிழந்தப் பெண்ணின் உறவினர்கள், அவர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வலிமையற்றவர் என கூறியுள்ளனர்.
நிகவெரட்டிய கொட்டாஹெர பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் ஊடாக சுற்றுலா விசா பெற்றுக்கொடுத்து குறித்த பெண் மோசடியான முறையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த கொரோனா காலத்தில் இலங்கைக்கு வருகைத்தந்து இந்த ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி ஓமனுக்கு வேலைக்குச் சென்ற நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண் ஓமானில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அந்த வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவர் நன்றாக இருப்பதாகவும், ஆனால் அந்த அழைப்பின் பின்னர் எந்த தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இது தொடர்பில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்த போதிலும், குறித்தப் பெண் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றுள்ளதாகவும், தகவல்களை பெற்றுக்கொள்ளும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.