அரசியல்
நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை
நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் ஏற்பட்ட குழப்ப நிலையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவர் அருகில் வந்த சனத் நிஷாந்த, அவர் கையில் இருந்து கோப்புக்களைப் பறித்துச் சென்றார்.
இதன்போது அங்கு ஒன்று திரண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் பதற்ற நிலை ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது இடைமறித்த சனத் நிஷாந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
27.2 இன் கீழ் சபாநாயகரின் அனுமதியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியை சமர்ப்பித்ததாக அவர் கூறினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.
நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இவ்வாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் தனது இடத்தில் இருந்து எழுந்து சஜித் பிரேமதாசவின் இடத்திற்குச் சென்று குழப்பம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர்.
அதேசமயம், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இடத்தில் ஒன்று திரண்டதுடன் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது, பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்கள் உள்ளிட்டோரே காரணம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு அருகில் வந்து இடையூறு செய்ததன் காரணமாக 05 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.