இலங்கை
முன்னாள் காதலனை தாக்கி பணம் பறித்த பெண்
முன்னாள் காதலனை தாக்கி பணம் பறித்த பெண்
களுத்துறையில் இளைஞர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து பணம் பறித்த சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹொரணை, ஹல்தொட்ட தலாவ பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைதான மனைவிக்கு 25 வயது எனவும் அவரது கணவருக்கு 30 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பணம் பறிக்கப்பட்ட இளைஞனும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கிய பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில்,
” குறித்த பெண் வேறொரு நபரை திருமணம் செய்த பின்னர், தன்னை விட்டு பிரிந்து சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு என்னை அவரது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
தனக்கு திருமணமாகிவிட்டதாகவும், தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறினார். அதன் பின்னர் பெண்ணின் அறிவுறுத்தலின் பேரில் நான் அவரது வீட்டிற்கு சென்றேன்.
அப்போது அந்த பெண் தன்னை ஒரு அறையில் தங்குமாறு கூறினார். பின்னர், வீட்டில் மறைந்திருந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு நபரும் திடீரென அத்துமீறி நுழைந்து என்னை தாக்கினர்.
மேலும் தாக்குதலில் இருந்து என்னை விடுவிக்க 50,000 ரூபா கப்பம் கோரினர். இதன்போது வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த 25,000 ரூபா பணம், ஏ.டி.எம் அட்டை மற்றும் அதன் இரகசிய இலக்கத்தை அவர்களிடம் வழங்கினேன்.
குறித்த பெண்ணும் மற்றைய நபரும் தன்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காமல் பலவந்தமாக அங்கேயே வைத்திருந்தனர்.
மிகுதி 25,000 ரூபாய்க்கு பதிலாக தனது கைத்தொலைபேசியையும் எடுத்துச் சென்றனர். மிகுதி 25000 ரூபாவிற்கு கைத்தொலைபேசியை அடகு வைத்துள்ளதாகவும், 14 நாட்களுக்குள் அதனை திரும்ப பெற தவறினால் அதற்கான உரிமையை தான் பெற்றுக்கொள்வதாகவும் போலி கடிதமொன்றை எழுதுமாறு சந்தேகநபர்கள் மிரட்டினார்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வீட்டில் இளைஞன் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் துரித கதியில் செயற்பட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கணவன் மற்றும் மனைவியை கைது செய்துள்ளனர்.
தாக்குதலால் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கப்பம் கோரப்பட்ட பணத்தில் இருந்து 24,500 ரூபாயும், சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை தேடி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.