இலங்கை
இலங்கை அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத்திட்டம் ஒரு அழகான காகித பூ
இலங்கை அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத்திட்டம் ஒரு அழகான காகித பூ
இலங்கை அரசாங்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு அழகான காகித பூ என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் என்பது பார்வைக்கு நன்றாகவும் அழகாகவும் உள்ளது.
இருந்தாலும், அது எங்களுடைய மக்களை சென்றடையுமா? ஒழுங்காக நடைமுறைக்கு வருமா? போன்ற பல்வேறு கேள்விகள் எங்கள் மத்தியில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“என்னை பொருத்தமட்டில் வரவு செலவுத்திட்டம் என்பது இப்போது வாசிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக அரச ஊழியர்களுக்கு, விவசாயிகளுக்கு மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அடுத்த முக்கியமான விடயமாக, மாகாண சபைகள் பல்கலைக்கழகங்களை உருவாக்கலாம் என்ற விடயமும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இது ஒரு மிகச் சிறந்த தீர்மானம். ஆனால் இது ஒரு காகித பூவாகத்தான் நான் பார்க்கின்றேன்.
வரி விதிப்பு என்பது ஜனவரி மாதமே வர இருக்கின்றது. இந்த வரியை கட்டுவதற்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்துவதற்கு நேரிடும்.
ஆனால், அவர்களுடைய சம்பள உயர்வு என்பது மார்ச் மாதத்துக்கு பின்னரே கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை, ஆனால் மாகாண சபைகளுக்கு பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அதிகாரம் தொடர்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.
காணாமல்போன உறவுகளுக்கான நட்டஈட்டுத் தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது என்று ஜனாதிபதி வாசித்தார். என்னை பொருத்தமட்டில் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால் அந்த மக்கள் போரில் தங்களுடைய உறவுகளை கண்முன்னால் ஒப்படைத்ததற்கு நியாயம் கேட்டு, பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அந்த மக்களின் பிரச்சினைகளை நிவாரணத்தின் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே சலுகைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக தான் இருக்கின்றது.
அந்தந்த நேரத்தில் வாசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது, முக்கியமாக விவசாயிகளுக்கு, கடற்றொழிலாளர்களுக்கு, மக்களுக்கு, மற்றும் அரசு ஊழியர்களுக்கு இப்படியான சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் நாங்கள் அதை வரவேற்க முடியும்.
அது நடைமுறைபடுத்தும் வரையில் எங்களால் கருத்துக்களை தெரிவிக்க முடியாது. இருப்பினும் இந்த வரவு செலவு திட்டம் என்பது பார்வைக்கு மட்டுமே நன்றாக உள்ளது.
அது எங்கள் மக்களை சென்றடையுமா அல்லது இந்த பத்தாயிரம் வரிகட்டுவதற்கே சரியாகிவிடுமா என்ற கேள்விகள் இருக்கும் அதேவேளை மொத்தத்தில் இந்த வரவு செலவுத்திட்டம் ஒரு அழகான காகித பூ மாத்திரமே” என தெரிவித்தார்.