இலங்கை

இலங்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் விரிவுரையாளர் தகவல்

Published

on

இலங்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் விரிவுரையாளர் தகவல்

இயற்கை சமிக்ஞைகளை கருத்தில் கொண்டு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெருமளவான இழப்புக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கிருபைராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் சில வருட காலமாக தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த இயற்கை சமிக்ஞைகளை கவனத்தில் கொண்டு நாம் சில முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் பெருமளவான பாதிப்புகளில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக கரையோரத்தை அண்டியுள்ள பகுதிகளில் விசேட கவனம் செலுத்துவதோடு மாணவர்கள் மத்தியில் அனர்த்தக் கல்வி தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் இருந்து இலங்கை மக்கள் 100 வீதம் மீளாத நிலையில் மீண்டுமொரு அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை சமுதாயத்தின் மத்தியில் உருவாக்க வேண்டும்.

விஞ்ஞான பூர்வமாக சான்றாதாரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து, இந்தியத் தகட்டில் புதிய உப தகடொன்றின் தோற்றமும், இலங்கையிலும், அதனை அண்டிய கடல் பிராந்தியங்களிலும் உள்ளகத் தகடுகள் மற்றும் குறைகளின் விருத்தி இன்று தோன்றியுள்ள நிலநடுக்க நிலைமைகளுக்கு பிரதான காரணங்களாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக இலங்கையின் கிழக்கே விருத்தியடைந்துள்ள குறைகள் உதைப்புக் குறை (Thrust fault) சார்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நிலநடுக்கங்களையும் அதனோடு இணைந்ததான சுனாமி போன்றவற்றையும் உருவாகுவதற்கு வேண்டிய அடிப்படையான புவிச்சரிதவியல் நிலைமைகள் என்னவோ அவை இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்குப் ஆகிய பிராந்தியங்களிலும் விருத்தி பெற்றுள்ளன.

இத்தகைய பின்னணியிலேயே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு பிரதேசங்களை அண்மித்து நிலநடுக்கங்கள் அடிக்கடி தோன்றுகின்றன.

கடந்த 2007.07.18 ஆம் திகதி இலங்கையில் தென்மேல் கரையிலிருந்து 300 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் 5.2 ரிச்டர் அளவுத்திட்டத்தில், கடல் அடித்தளத்திலிருந்து 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வினை ஹம்பாந்தோட்டயில் இருந்து யாழ்ப்பாணம் வரையான கரையோரத்தில் மக்கள் உணர்ந்ததுடன், திஸ்ஸமகாராம என்னும் இடத்தில் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த 29.12.2021 மட்டக்களப்பு கரையோரத்திலிருந்து 300 கிலோ மீற்றர் கடலுக்குள் 4.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கமும், 4.6 ரிச்டரில் கடந்த 11.09.2023 அன்று மட்டக்களப்புக்கு வட கிழக்காக 310 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடா கடலடித்தளத்தில் மீண்டுமொரு நிலநடுக்கமும் பதிவானது.

இவை மட்டுமன்றி, 15.09.2018 ஆம் திகதி அன்று திருகோணமலை துறைமுகத்தை அண்டியும், 19.02.2021 ஆம் திகதி அன்று பாணமை கடல் பிராந்தியத்திலும், 13.07.2022 கல்முனை கடற்கரையிலிருந்து 300 கிலோ மீற்றர்கள் கடலடித்தளத்திலும், 19.03.2023 அன்று திருகோணமலையின் கோமரங்கடவல பகுதியிலும் நில அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் 2023.11.12 ஆம் திகதி மொரவெவ பகுதியில் 3.5 ரிச்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து 2023.11.14 கொழும்புக்கு தென்கிழக்கே அமைந்த கடல் பிராந்தியத்தில் 6.1 ரிச்டரில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சமுதாய மட்டத்திலான முன்னாயத்தம் தொடர்பில் முயற்சிகளை முன்னெடுப்பது அவசியம்.

Exit mobile version