இலங்கை

வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியுடையது: சாடுகிறார் ராஜித

Published

on

வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியுடையது: சாடுகிறார் ராஜித

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே இதனை ஆதரிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.

வரவு செலவுத் திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“இந்த வரவு – செலவு திட்டத்தில் குறைசொல்லும்படி எந்த ஒரு விடயமும் இல்லை. ஒவ்வொரு தரப்பினருக்குமான சில ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது.

ஆனால், நாடாளுமன்ற வரலாற்றைப் பார்த்தால், எத்தனை முன்மொழிவுகள் கொண்டு வரப்படுகின்றன. எத்தனை முன்மொழிவுகள் நிறைவேற்றப்படுகின்றன.

மக்களுக்கு எது முக்கியம்? முன்மொழிவுகள் அல்ல, நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுதான்.

அடுத்த ஆண்டு இறுதியில் இவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகின்றன என்பதுதான் முக்கியம்.

இந்த வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம். இதில் ஐக்கிய தேசியக் கட்சியினால் செய்ய முடியாத பல விடயங்கள் உள்ளன” என்றார்.

Exit mobile version