இலங்கை
வடக்கு கிழக்கில் மூடப்படும் வைத்தியசாலைகள்
வடக்கு கிழக்கில் மூடப்படும் வைத்தியசாலைகள்
வடக்கு கிழக்கில் யுத்தம் நீடித்த காலப் பகுதியில் இல்லாத அளவு இலங்கையின் வைத்தியதுறையானது பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் நேற்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் வைத்தியசர் ஹரித்த அலுத்கே, இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு மேலும் 500 வைத்தியர்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
தாம் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள போதிலும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளால் இதுவரை அதற்கான உரிய பதில்கள் எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
வைத்தியர்களை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கு அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் சுகாதாரத்துறையை பாதுகாத்து, நோயாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதை இலக்காக கொண்டு மத்திய செயற்குழு கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் எனவும் வைத்தியர் ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பணி விலகல் போராட்டத்தை மாத்திரம் தற்காலிகமாக கைவிடத் தீர்மானத்துள்ளோம் என்ற போதிலும் எதிர்ப்பு மற்றும் தெளிவுபடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக அசமந்த போக்குடன் செயற்படும் ஆட்சியாளர்களுக்கு தேவையான அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகத்துவருகின்றோம் எனவும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவதுறைக்கு முன்எப்போதும் இல்லாத வகையில் வைத்தியசர்கள் வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் இதுவரை விசேட வைத்தியர்கள் உட்பட வைத்தியர்கள் ஆயிரத்து 500 பேர் வரை ஒரு ஆண்டு என்ற குறுகிய காலத்திற்குள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் இருந்த வைத்தியர்களில் ஐந்து வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனைவிட மேலும் அவதான நிலைமை ஏற்பட்டுள்ளதுாக எச்சரித்துள்ள வைத்தியர் ஹரித்த அலுத்கே, சுமார் 5000 வைத்தியர்கள் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்து, நாட்டில் இருந்து செல்வதற்கு தயாராக இருக்கின்றனர் என கூறியுள்ளார். நாளையோ நாளை மறுதினமோ ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதத்திலோ நாட்டில் இருந்து எதிர்பார்ப்பில் அவர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒட்டுமொத்த வைத்தியதுறையில் மேலும் 5000 பேர் இல்லாது போகும் பட்சத்தில் 25 வீதமானவர்களை இழக்க நேரிடும் எனவும் வைத்தியர் ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார். இதனைவிட வேறு எந்த விதத்தில் வைத்தியத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடியை அரச தரப்பினருக்கு எடுத்துரைக்க வேண்டும் என தமக்கு தெரியவில்லை எனவும் அவர் தனது ஆதக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் பல தசாப்த காலம் யுத்தம் இடம்பெற்றது எனவும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட இல்லாத வகையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன எனவும் வைத்தியர் ஹரித்த அலுத்கே சுட்டிக்காட்டினார். விசேட வைத்தியர்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் விசேட மருத்துவர்கள் இன்றி சாதாரணமாக மருத்துவர்களால் மிகவும் அவதானத்துடன் பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக நாட்டில் வைத்தியர்கள் இல்லாமல், மூடப்பட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதில் வடக்கு கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளும் உள்ளடங்கியுள்ளன எனவும் வைத்தியர் ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புத்தளம், நுவரெலியா, உள்ளிட்ட மாவட்டங்களில் வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன எனவும் இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே மேலும் கூறியுள்ளார்.