இலங்கை

புலம்பெயர் நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதற்கு பயிற்சி

Published

on

புலம்பெயர் நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதற்கு பயிற்சி

புலம்பெயர் நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதற்கு முன் வழங்கப்படும் பயிற்சியை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பணிப்பெண்களுக்கு கட்டாய 28 நாட்கள் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையை அவதூறாகப் பேசும் ஆட்கடத்தல்காரர்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொரிய நாட்டின் விவசாயத்துறையில் தொழில்வாய்ப்புகளை இலக்காக்கொண்ட பயிற்சி மற்றும் வீட்டுப்பணிப் பெண் வேலைகளுக்கான தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கும் தனியார் நிறுவனமொன்றின் பயிற்சி நிலையம் மற்றும் அலுவலகத்தை, காலியில் திறந்து வைக்கும் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ஒரு காலத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் இலங்கையர்களை எந்தவித பயிற்சியும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பியது.

ஆனால், முறையான பயிற்சியின்றி யாரையும் அனுப்புவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளோம். சில முகவர் நிறுவனங்கள் இதில் திருப்தி அடையாமல் போகலாம்.

எந்த சூழ்நிலையிலும் இந்த முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன். நமது நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலான பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள், ஆனால் பெரும்பாலான பெண்கள், தொழில்களில் ஈடுபடாமல் இருக்கின்றனர்.

இருப்பினும் படித்த பெண்கள் திருமணத்திற்கு பிறகு தொழில்களுக்கு செல்வதில்லை. விசேடமாக நமது நாட்டில் வணிகத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவு. பெண்களின் தொழில் முயற்சியும் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது.

நாட்டின் தொழில்முனைவுக்கு வீட்டை நிர்வாகம் செய்யும் பெண்கள் முன்வருவார்களாயின் நாட்டுக்கு பெரும் பலமாக அமையும்.

கொரியாவில் தொழில்வாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்பும் ஆற்றல் அரசாங்கத்துக்கு மட்டுமே உண்டு.

இரு நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கைக்கு அமைவாக இவை இடம்பெறுகின்றன. ஆனால் கொரிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக நெசவாளர்கள், ஓவியர்கள் மற்றும் தோட்டப்பணியர் (Gardener) போன்றவர்களையும் கப்பல் தொழில் துறைகளுக்கும் அனுப்ப முடிந்துள்ளது.

கொரியாவில் எமக்கு தூதரகம் உள்ளது. ஆனால் தூதரகங்கள் மூலம் செய்ய வேண்டிய சில பணிகள் அங்கு பணியாளர்கள் இல்லாததால் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதனால்தான் தூதர்களுக்கு இவற்றைச் செய்ய நேரமில்லை. இதில், அரச துறை போன்றே தனியார் துறை மூலமும் கொரிய தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

மேலும், நமது நெசவாளர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் கப்பல் தொழில் துறையில் நிலவும் வேலை வாய்ப்புகளுக்காக செல்கின்றனர்.

தற்போது கொரிய கப்பல் தொழில் துறையில் இலங்கை ஊழியர்களுக்கு பெரும் கோரிக்கை உண்டு எதிர்காலத்தில் மேலும் அதிக தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என பார்த்துள்ளோம்” என்றார்.

Exit mobile version