இலங்கை

தமிழரசு கட்சி நிர்வாகத்தில் மாற்றம்

Published

on

தமிழரசு கட்சி நிர்வாகத்தில் மாற்றம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த 17 ஆவது தேசிய மாநாடு நான்கரை வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

எனினும், அதற்கு முன்னோட்டமாகக் கட்சியின் தலைவர் உட்பட புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக ஜனவரி 21 ஆம் திகதி கட்சியின் பொதுக்குழு விசேடமாகத் திருகோணமலையில் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று (05.11.2023) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கட்சியின் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 20ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும். அதன்போது கட்சித் தலைவர் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நியமனங்கள் பற்றி ஆராயப்படும்.

சுமுகமாகத் தேர்தலின்றி, இணக்கமான தீர்வுகள் ஏற்படுத்த முயற்சிகள், பேச்சுக்கள் அங்கு மேற்கொள்ளப்படும். எது, எப்படியாயினும் அடுத்த நாள் 21 ஆம் திகதி கட்சியின் பொதுக்குழு திருகோணமலையில் கூடிக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு மற்றும் தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கும்.

தெரிவுகளுக்குத் தேர்தல் தவிர்க்க முடியாமல் அமையுமானால் அவையும் அன்று இடம்பெறும். அதன் பின்னர் அடுத்த வாரம் ஜனவரி 27ஆம் திகதி கட்சியின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி மாநாடுகள் திருகோணமலையில் நடக்கும்.

அதேசமயம் தேவைப்பட்டால் அன்றைய தினமும் கட்சியின் தற்போதைய பொதுக்குழுவின் அமர்வு ஒன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்படும்.

தொடர்ந்து கட்சியின் தேசிய மாநாட்டை ஒட்டிய பொது அமர்வு அடுத்த நாள் ஜனவரி 28ஆம் திகதி திருகோணமலையில் கோலாகலமாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version