இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். குடும்பஸ்தர் கைது

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். குடும்பஸ்தர் கைது

போலி கடவுச்சீட்டு முறைக்கேடு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்றவேளை சந்தேக நபர் நேற்றையதினம்(31.10.2023) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர், தனது 5 வயது மகன் மற்றும் அவரது மனைவி என குறிப்பிடப்பட்ட காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவருடன் இத்தாலி செல்வதற்காக நேற்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 1.45 மணிக்கு G.9509 இலக்க ஏஆர் அரேபியா விமானத்தில் பயணிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் குடியகல்வு பரிசோதனை அதிகாரிகளிடம் தமது பயண ஆவணங்களை வழங்கியபோது, அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகங்கள் எழத் தொடங்கியதாகவும், ​​​​அவர்கள் மூவரும் எல்லை ஆய்வு பிரிவிடம் அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்பின்னர் அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின் போது, ​​குழந்தை, சந்தேக நபருடையது என்றும், குறித்த பெண் தொடர்பில் உள்ள அனைத்து ஆவணங்களும் போலியானது என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச்சீட்டை கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த கடவுச்சீட்டை வைத்து வேறொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற அவர், இதற்கு முன்னர் மனைவியின் கடவுச்சீட்டை பயன்படுத்தி மேலும் ஒரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினரால் 3 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version