இலங்கை
அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த திட்டம்
அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த திட்டம்
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நன்மைகள் தாமதமான குடும்பங்களுக்கும், உடனடியாக நன்மைகளை வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30.10.2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இன்றும் நாளையும் 1365,000 பயனாளிகளுக்கு 8.5 பில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் நாளை (31.10.2023) முதல் பயனாளிகள் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது ஜூலை மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் நிவாரண பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணியே நாளை முதல் ஆரம்பிக்கப்படும்.
அதன்பிறகு, செப்டம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு, அடுத்த மாத இறுதிக்குள் செலுத்த எதிர்பார்க்கப்படுவதோடு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் பணம் கொடுப்பதில் தொழில்நுட்ப சிக்கல்கள் எழுந்துள்ளன.
அவற்றைத் தீர்த்து, பணம் செலுத்துவதை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம். வங்கிக் கணக்குகள் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தன. இந்த வாரத்திற்குள் அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அஸ்வெசும கொடுப்பனவுகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.