இலங்கை

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகை

Published

on

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகை

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு வரவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் இன்று (30.10.2023) விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் அதனைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீண்டும் விண்ணப்பித்துள்ளன.

இந்நிலையில் முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டனவா என பரிசீலிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கைக்கு ஏற்கெனவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்ட போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அதனைத் திருத்தியமைக்க வேண்டும் என பிரதான நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது.

இருப்பினும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அச்சட்ட மூலங்களின் உள்ளடக்கத்திற்கு கடுமையான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பின்லாந்து, போலந்து, ஜேர்மனி மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றக் குழுவினர் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

சுமார் ஒருவார காலம் நாட்டில் தங்கியிருப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் அவர்கள், அக்காலப்பகுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version