அரசியல்
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க முடியாது
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனத் தகவல்கள் வெளியாகும் நிலையில், இவ்விரு தேர்தல்களையும் ஒத்திவைக்க முடியாது என்று இலங்கை கம்யூனிஸ் கட்சி தலைவரான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசமைப்பில் இடமுள்ளது. ஆனால், அதனை ஒத்திவைப்பதற்கு இடமில்லை.
அதேபோல் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கும் அரசமைப்பில் இடமில்லை. ஆளுந்தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடினால்கூட அதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றே நம்புகின்றேன்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அரசமைப்புக்கு அப்பால் சென்று, சிற்சில சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட நிறைவேற்று அதிகாரத்துக்கு அதிகாரம் இல்லை.” என தெரிவித்துள்ளார்.