இலங்கை

இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பில் மர்மம்

Published

on

இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பில் மர்மம்

இலங்கையில் காலநிலையில் துல்லியமான கணிப்புகளை செய்வதற்கு போதிய அறிவோ பயிற்சியோ இல்லாமல் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவில் சாதாரண தரம் மட்டும் சித்தியடைந்த ஐந்து வானிலை ஆய்வாளர்கள் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்காளர்கள் குழு அண்மையில் வெளியிட்ட விசேட அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் என்பது நாட்டிற்கு முன்வைக்கப்படும் சில கணிப்புகள் சரியாக இல்லாத காரணத்தினால் சமூகத்தால் அடிக்கடி விமர்சிக்கப்படும் ஒரு நிறுவனமாகும்.

 

குறிப்பாக விவசாயம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட பிழையான காலநிலை முன்னறிவிப்புக்கள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 

இந்த நிலைமையை ஆராய்ந்த கோபா குழு தனது அறிக்கையில், துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடுவதற்கு அவசியமான ரேடார் அமைப்பு இல்லாமல் 15 ஆண்டுகளாக வானிலை முன்னறிவிப்புகளையும் கணிப்புகளையும் நாட்டிற்கு வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கி வருகிறது.

 

இது தவிர, கொன்கலகந்த பகுதிக்கு கணிப்புக்கான ரேடார் அமைப்பை ஏற்படுத்த, திணைக்களம் 402 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது, ஆனால் 13 ஆண்டுகளாக அது செயல்படுத்தப்படவில்லை.

 

இந்த ரேடார் அமைப்பை நிறுவுவதற்காக கொண்டுவரப்பட்ட உபகரணங்களில் 91 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் ஏற்கனவே காணாமல் போயுள்ளதாக கோபா அறிக்கை காட்டுகிறது.

 

நாடு முழுவதும் பெய்யும் மழையின் வீதத்தை அளக்க 444 மழை மானிகள் நிறுவப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 44 அளவீட்டுத் தொகுப்புகளிலிருந்து வளிமண்டலவியல் திணைக்களம் எந்தவொரு தரவுகளையும் பெறவில்லை என்று இந்த அறிக்கையில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version