இலங்கை
தமிழர்களின் மனித நேயம்: நெகிழ்ச்சி அடைந்த சிங்களவர்
தமிழர்களின் மனித நேயம்: நெகிழ்ச்சி அடைந்த சிங்களவர்
மூதூர் பிரதேசத்தில் வாகன விபத்தில் சிக்கிய சிங்களவர்கள் இருவர் தமிழர்கள் செய்த உதவியால் நெகிழ்ச்சியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்திற்கு முகம் கொடுத்த சிங்களவர், “தமிழர்களின் மனித நேயம்” என்ற தலைப்பில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில்,
“கடந்த வாரம் மூதூர் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது. மூத்த மகனும் நானும் மட்டுமே அதில் பயணித்தோம். இரவு வெகுநேரமாகிவிட்டது. மழையும் பெய்தது. வீதியின் இருபுறமும் உள்ள வனப்பகுதியில் யானைகள் உள்ளன. வாகனம் சேதமடைந்து அசையாமல் நின்றுவிட்டது.
நாங்கள் மிகவும் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டோம். காப்புறுதி நிறுவன அதிகாரிகள் அவ்விடத்திற்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றார்கள். இப்போது தான் மனவேதனை அதிகரித்தது.
அப்போது அந்த வழியே ஒரு தமிழர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். உண்மையில் அவரையே மனிதன் என கூறலாம். அவரது உதவி எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அன்று இரவு, அவர் 70 மைல்கள் சென்று, வாகனத்திற்கு என்ன நடந்தது என்பதைச் சரிபார்க்க ஒரு நபரை கண்டுபிடித்து அழைத்து வந்தார்.
வாகனத்தை இழுக்க டிராக்டர் ஒன்ரையும் கண்டுபிடித்தார். மூடியிருந்த கடை ஒன்றை திறக்க வைத்து கயிறு ஒன்றையும் எடுத்து வந்தார். அந்த நபர் தனது மகனை அழைத்து எங்கள் பாதுகாப்பிற்காக அவ்விடத்தில் விட்டு சென்றார். அவ்வழியாகச் சென்ற சுமார் 25 தமிழ் இளைஞர்களும் எங்கள் பாதுகாப்பிற்காக வந்தார்கள். சில இளைஞர்களுக்கு சிங்களம் கூட தெரியாது. ஆனால் அவர்கள் உதவ தயாராக இருந்தனர்.
ஏழெட்டு கிலோமீட்டர் காரை இழுத்து வந்த தமிழ் இளைஞர்கள் பணம் வேண்டாம் என கூறிவிட்டார்கள். அன்று இரவு சுமார் மூன்று மணி நேரம் அந்த மக்கள் எங்களுக்காக தியாகம் செய்தனர்.
அதுதான் மனிதாபிமானம். அது தான் தமிழ் மக்களின் மனித நேயம். தமிழ் மக்கள் மீது என் இதயம் முழுவதும் நிறைந்து விட்டது. படத்தில் இருப்பவரே எனக்கு உதவிசெய்த பிரபா. மனிதாபிமானம் நிறைந்த மனிதன்” என பதிவிட்டிருந்தார்.