இலங்கை

அரசாங்கத்தின் அனுசரணையில் தொடர்ச்சியாக நில அபகரிப்பு

Published

on

அரசாங்கத்தின் அனுசரணையில் தொடர்ச்சியாக நில அபகரிப்பு

அரச நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகளின் அனுசரணையில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பணிமனையில் நேற்று (24.10.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் மக்கள் இங்கே வருகை தந்து தங்களுடைய பல பிரச்சினைகளை எமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்கள்.

இதில் பிரதானமான பிரச்சினையாக நில அபகரிப்பு தொடர்பிலேயே பல குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதேவேளை மூதூர் கங்குவேலி குளத்தை ஆக்கிரமித்து அந்தக் குளத்தை நம்பி விவசாயம் செய்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுடைய விவசாய செய்கையை குழப்பும் நோக்கில் குளத்தில் காணப்பட்ட நீரை வெளியேற்றி குளத்துக்குள்ளேயே வேற்று இனத்தவர்கள் வருகை தந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுத்து மூலமாக கொடுக்கப்பட்டிருந்தும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை. நீர்ப்பாசன அதிகாரிகளிடம் முறையிடுமாறு பொலிஸார் கூறுவதாகவும் அவர்களிடத்தில் முறையிட்டும் எதுவித நடவடிக்கையை எடுக்கவில்லை.

அத்துடன் நீண்ட நாட்களாக திருகோணமலை மாவட்டத்தை ஒரு பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற திட்டம் இப்பொழுது துரித கதியில் நடைமுறை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை விஷேடமாக குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 30 க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும் வணக்கஸ்தலங்களும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் 23 இடங்களில் வேலைகள் இடம்பெற்று வருகின்றபோதிலும் குறிப்பாக பௌத்த மக்கள் வாழாத இடத்தில் கூட புத்தர் சிலைகளை நிர்ணயிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு ஆளுநர் தடை விதித்தாலும் கூட பாதுகாப்பு பிரிவின் அனுசரணையுடன் நிர்மான வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Exit mobile version