இலங்கை
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கொள்கை
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கொள்கை
அந்நிய கையிருப்பு இருப்பை பொறுத்து, அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதி கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளதாக மூத்த அரச அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில செய்தித்தாளொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திறைசேரி, மத்திய வங்கி, ஜனாதிபதி செயலகம் மற்றும் வாகன இறக்குமதியாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்று, இதற்கான கொள்கையொன்றை வகுத்து வருகின்றது.
எனினும் இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்க வேண்டும்.
பழைய வாகனங்களுக்கு அதிக உதிரி பாகங்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டும், அதன் மூலம் வெளிநாட்டு கையிருப்பு அதிகமாக வெளியேற்றுவதை கருத்தில் கொண்டும் இந்த கொள்கை வகுக்கப்படுகிறது.
இதன்படி, இரண்டு ஆண்டுகள் பழமையான வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை இந்த கொள்கையில் உள்ளடக்கப்படவுள்ளது.
அத்துடன் குறிப்பிட்ட வகைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதன்படி, 1000 சிசி மற்றும் 1300 சிசி திறன் கொண்ட வாகனங்களுக்கு இந்த கொள்கையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், இறக்குமதி காலம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அனுமதி, வெளிநாட்டு கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கையான முடிவை எடுக்க வேண்டும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.