இலங்கை
பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்பு குறித்து அனுர விமர்சனம்
பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்பு குறித்து அனுர விமர்சனம்
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் ரீலோட் போன்று பதவி நீடிப்பு செய்யப்படுகிறார் என்று மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக வினவபட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“சபாநாயகர், அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற வகையில் அரசியலமைப்பின்படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கவேண்டும்.
எனினும் கடந்த மாதங்களில் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு பதிலாக, தற்போதைய அதிபரின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்கப்படுகிறது.
யாரோ ஒருவர் தங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்வதைப் போன்றே. பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட கடைசி நீடிப்பு அக்டோபர் 9 ஆம் திகதி முடிவடைந்தது.
இந்தநிலையில் அவருக்கு மூன்று வார கால பதவி நீடிப்பை வழங்குவதற்கான மற்றொரு பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றது.
இருப்பினும், அரசியலமைப்பு சபை, அந்த பரிந்துரையை அங்கீகரிக்கவில்லை. எனவே தற்போது இலங்கையின் பொலிஸ் மா அதிபர் யார் என்று அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.
ரீலோட் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், புதிய பொலிஸ் மா அதிபர் யார்? என்று அவர் வினவினார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதமர் தினேஸ் குணவர்த்தன, பொலிஸ் மா அதிபர் தொடர்பாக, ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு இந்த மாத இறுதி வரை சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.