அரசியல்

நாமல் ராஜபக்சவிற்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன்

Published

on

நாமல் ராஜபக்சவிற்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன்

யுத்தம் தீர்வல்ல, அதற்கு காரணம் யாராகவும் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான பதிலடியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (20.10.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு முன்னால் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இத்தகைய பிரச்சினைகளை யுத்தத்தினால் தீர்க்கவே முடியாது. அதற்கு அப்பால் இருக்க கூடிய மூல காரணங்களை தேடி தீர்க்க வேண்டும் என்று கூறினார்.

மிகவும் மகிழ்ச்சியான விடயம். அது பாலஸ்தீனத்துக்கு மட்டுமல்ல. இலங்கைக்கும் பொருந்துகிறது என்பதை இந்த இடத்திலே ஞாபகப்படுத்தி எனது உரையை ஆரம்பிக்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்திலே, காசாவில், மேற்குகரையில் நிகழக்கூடிய அடாவடி யுத்தத்தால், சண்டையால், சச்சரவால் உயிர்களை இழந்து, அவயங்களை இழந்து, துன்பப்படும் அப்பாவி மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல், காசாவில் இருந்து போராளிகளால் தாக்கப்பட்ட, உயிர்களை இழந்த அவயங்களை இழந்த, இஸ்ரேலின் தென் பகுதியில் வாழும் மக்களுக்கும், கடத்தபட்ட மக்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த சண்டை முழுமையான யுத்தம் அல்ல.

யுத்தம் என்றால் பல்வேறு சண்டைகளின் தொகுப்பு ஆகும். ஆகவே இந்த சண்டை என்பது அனைத்துக்கும் ஆரம்பம் அல்ல. இது ஆக ஹமாஸ் போராளிகளினால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை அல்ல.

அதனால், தென் இஸ்ரேலில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். படை வீரர்களும் கொல்லப்பட்டார்கள். பலர் கடத்தப்பட்டர்கள்.

ஆனால், அது ஆரம்பம் அல்ல. இந்த யுத்தம் நீண்ட நெடுங்காலமான பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் அடாவடி ஆக்கிரமிப்பு காரணமாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதையும், மூல காரணம் பலஸ்தீன சகோதரர்களின் மீதான் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புதான் காரணம். இதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாமும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

ஆகவே நாமல் ராஜபக்ச சொன்னதை போன்று இந்த பிரச்சினையின் அடிப்படை காரணம் கண்டறியப்பட வேண்டும். பாருங்கள், நேற்று முதல்நாள், காசா தீரத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனையின் மீது குண்டுகள் விழுந்தன. பாடசாலையின் மீது குண்டுகள் விழுந்தன. மக்கள் குடியிருப்புகளின் மீதும் குண்டுகள் விழுந்தன.

இதேதான் இலங்கையிலும் நிகழ்ந்தது. இலங்கையிலும் அப்படித்தான். வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் போது, மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் விழுந்தன. அப்படித்தான் காசாவிலும் விழுகின்றது. வடக்கு, கிழக்கில் பாடசாலைகளின் மீது குண்டுகள் விழுந்தன. அப்படித்தான் காசாவிலும் விழுகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் போது, மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டுகள் விழுந்தன. அப்படித்தான் காசாவிலும் விழுகின்றது.

ஆகவே யுத்தம் தீர்வல்ல. அதற்கு காரணம் யாராகவும் இருக்கலாம். ஆனால், யுத்தம் தீர்வல்ல. ஆகவே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஆகவே தீர்வு காணப்பட மூலகாரணம் கண்டறியப்பவேண்டும். இன்று, இவற்றை பார்த்துக்கொண்டிருக்கும் ஐநா சபையாக இருக்கலாம் அல்லது ஐநா மனித உரிமை ஆணையகமாக இருக்கலாம். அவர்கள் பல்லில்லாத பாம்புகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரங்கள் இல்லை.

இலங்கையிலும் அப்படி தான். இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் சாட்சியமில்லாத யுத்தமாக நிகழ்ந்தது. அதுதான் உண்மை. இன்று ஐநா நிபுணர்களால் அங்கு அரபு நாட்டிலே, பாலஸ்தீன யுத்தத்தை பார்த்து அறியக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் அப்படியும் இருக்கவில்லை. அப்படி பார்த்து இருந்தாலும்கூட, அவர்களுக்கு பல்லில்லை. சர்வதேச சமூகம் என்று ஒரு சமூகம் இருகின்றது.

அவர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம் என்று எதுவும் கிடையாது. ஆக, அவர்களுக்கு தத்தம் தேசிய நலன்கள்தான் இருக்கின்றன. அமெரிக்காவாக இருக்கலாம். இந்தியாவாக இருக்கலாம். ஐரோப்பாவாக இருக்கலாம். அவர்களுக்கு அவர்களின் தேசிய நலன்தான் நியாயம், நீதி, நேர்மை.

ஐநா சபையை பொறுத்தவரையிலே இலங்கை நடந்த யுத்தத்தில் நாப்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக, அவர்களது உள்ளக அறிக்கையில் சொல்லப்பட்டதாக நான் அறிந்தேன். தமிழ் தரப்பை பொறுத்தவரையிலே ஒரு இலட்சத்துக்கு மேல் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஐநா சபை பாடம் படித்து கொண்டதாககூட அவர்களது உள்ளக அறிக்கையில் சொல்லப்பட்டதாக நான் அறிந்தேன். ஆனால், ஐநா பாடம் படிக்கக்கவில்லை.

பாடம் படித்து இருந்தால், காசாவில் இந்த அநியாயம் நடக்காது. மேற்கு கரையில் இந்த அநியாயம் நடக்காது. பாடம் படித்து இருந்தால், இந்த அநியாயம் நடக்காது. பெண்கள், குழந்தைகள் இப்படி கொல்லப்பட மாட்டார்கள். ஆகவே சர்வதேச சமூகம் அல்ல, ஐநா சபை அல்ல, நாங்கள்தான் பாடம் படிக்க வேண்டும். ஐநாவோ, சர்வதேச சமூகமோ எங்களை காப்பற்ற வராது.

இந்நாட்டுக்குள் நாம்தான் எம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும். இன்று இந்த சபையில், அப்பாவி பலஸ்தீன மக்களுக்காக குரல் எழுப்பிய, அரசு தரப்பு, எதிர்தரப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் ஒன்று சொல்லி வைக்க விரும்புகிறேன். இதே நிகழ்வுகள்தான் இலங்கையிலும் நிகழ்ந்தன.

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இன்று, இரண்டு நாடுகள், என்ற Two State தீர்வு இருக்க வேண்டும் என நாம் கூறுகிறோம். 1967ம் ஆண்டுக்கு முன் இருந்த நிலப்பகுதிக்கு இஸ்ரேல் மீளப்பெற வேண்டும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாக வேண்டும். அதை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும்.

அதேபோல், இஸ்ரேல் நாட்டையும், இருப்பையும் பாலஸ்தீன நாடு அங்கீகரிக்க வேண்டும். இதுதான் அங்கே தீர்வு. இலங்கையிலும் மீண்டும் யுத்தம் நிகழ வேண்டாம் என்றால், பிரச்சினை தீர வேண்டும் என்றால், சிங்களவர்களும், தமிழர்களும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால், பாலஸ்தீனத்துக்கு ஒரு நியாயம். இலங்கைக்கு வேறு நியாயம் இருக்க முடியாது.

இலங்கையில் இன்று தனிநாடு கோரிக்கை காணாமல் போய் விட்டது. ஆகவே ஒரே இலங்கைக்குள் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சி வழங்குவதை சிங்களவர்கள் அங்கீகரிக்க வேண்டும். இங்கே வந்து பாலஸ்தீனத்துக்கு அனுதாபம் தெரிவிப்பது உண்மையாக இருந்தால், இதை நீங்கள் செய்ய வேண்டும். அதுதான் நியாயம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version