இலங்கை

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை

Published

on

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்கின்றோம்.அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் போதே எமது போராட்டத்தினை நிறுத்துவோம் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதி மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து நேற்றைய தினம் (16.10.2023) உயர்மட்ட கலந்துரையாடலை நடாத்தியிருந்தார்.

இதன்போது மேய்ச்சல் தரையினை ஆக்கிரமித்துள்ளவர்களை ஒரு வாரத்திற்குள் அகற்றவும் கால்நடை பண்ணையாளர்கள் அச்சமின்றி தமது கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இவற்றினை ஒரு வார காலத்திற்குள் நடாத்துவதற்கான பணிப்புரைகளை விடுத்திருந்தார்.

இதேவேளை மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாகவும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தமது சுழற்சிமுறையிலான போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

ஜனாதிபதி தமது மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து முன்வைத்துள்ள தீர்மானத்தினை வரவேற்கின்றோம்.அவருக்கு கால்நடை பண்ணையாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனினும் ஜனாதிபதி முன்வைத்துள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறைப்படுத்தப்படும்போது நாங்கள் அங்கு செல்லமுடியும்.

ஜனாதிபதி நேற்று தீர்வினை முன்வைத்துள்ள அதேநேரம் இன்றைய தினம் மேய்ச்சல் தரைப்பகுதியில் உழவு இயந்திரங்கள் கொண்டு மேய்ச்சல் தரை காணிகள் விதைப்பு நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவர்களை அங்கிருந்து அகற்றாமல் நாங்கள் செல்வோமானால் அது எங்களது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைமையினையே ஏற்படுத்தும்.

எங்களுக்கு இன்று இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை ஜனாதிபதி மட்டுமே அவரால் மட்டுமே எமது பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்கமுடியும்.

நாங்கள் இந்த நாட்டில் வாழும் பூர்வீக மக்கள் எங்களுக்கான ஒரு தொழிலைக்கூட எங்களது நிலத்தில் செய்யமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எமது கணவர்மார்கள்,சகோதரர்கள் மேய்ச்சல் தரைக்கு செல்லும்போது அவர் வீட்டுக்கும் வரும் வரையில் நாங்கள் எங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் நிலைமையே ஏற்படுகின்றது என பண்ணையாளர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த 32 நாட்களாக எந்தவித வருமானமும் இன்றி வீதியில் இருக்கின்றோம்.

எமது குடும்பத்தின் நிலைமையினை சிந்தித்துப்பாருங்கள்.பிள்ளைகளின் கற்றல் செலவு, அவர்களுக்கான உணவுக்கான செலவு, வீட்டுச்செலவு என பல்வேறுபட்ட கஷ்டங்களை சுமந்தே எமது உறவுகள் வீதிகளில் போராடிவருகின்றனர்.

அவர்கள் இந்த நாட்டினை பிரித்து கேட்கவில்லை.காலம் காலமாக பரம்பரைபரம்பரையாக எமது மேய்ச்சல் நிலங்களாக கால்நடை வளர்த்த பகுதிகளில் அவற்றினை வளர்க்கவே கோருகின்றோம். ஜனாதிபதி வழங்கிய உத்தரவாத்திற்கு அமைய அங்குள்ளவர்கள் அகற்றப்படும்போது தமது போராட்டத்தினை கைவிடுவோம் எனவும் அதுவரையில் போராட்டம் தொடரும்.

மேலும் ஜனாதிபதியின் உத்தரவாதத்தினை மதிப்பதாகவும் அவற்றினை வரவேற்பதுடன் நன்றியும் தெரிவித்துக்கொள்கின்றோம்.அந்த தீர்மானத்தை ஜனாதிபதி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

நிறைவேற்றும் போதுதான் நாங்கள் அப்பகுதிக்கு மாடுகளை கொண்டு செல்லமுடியும். அதுதான் கால்நடை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பாக அமையும். ” என மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version