இலங்கை

சனல் 4 குறித்து நாடாளுமன்றத்தில் பிரேரணை

Published

on

சனல் 4 குறித்து நாடாளுமன்றத்தில் பிரேரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.

குறித்த தெரிவுக்குழு நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காணொளியில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்காக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பிள்ளையானின் ஊடக செயலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானா தெரிவித்திருந்தார்.

இதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலேவுக்கும் தாக்குதல்தாரிகளுக்கும் இடையே தாம் சந்திப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தமக்கு தாக்குதல்தாரிகளை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு, தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version