Connect with us

அரசியல்

ரணில் சீனாவுக்கு செல்வது ஏன்? ஜேர்மன் பயணம் தோல்வியா?

Published

on

tamilni 110 scaled

ரணில் சீனாவுக்கு செல்வது ஏன்? ஜேர்மன் பயணம் தோல்வியா?

Courtesy: கூர்மை

சீனாவைக் கடந்து இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் விடயத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் முற்படுவதாகத் தெரிகின்றது.

இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை எந்த வழியிலாவது பெற முற்படுகிறார்.

அதேநேரம் சீனாவிடமும் இருந்து அதிகளவு நிதியைப் பெறும் முயற்சிகளும் தீவிரமாக இடம்பெறுகின்றன.

அமெரிக்கச் செய்தி ஊடகமான புளும்போர்க் (Bloomberg) தகவலின் பிரகாரம், ரணில் சீனாவிடம் சென்று உதவிகளைப் பெறுவதைவிடவும் அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மன், மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து நிதியுதவிகளைப் பெறுவதே மேல் என்ற தொனி தென்படுகின்றது.

இப் பின்னணியோடுதான் ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு வழங்கவிருந்த இரண்டாம் கட்ட நிதியுதவிகளை வழங்க முடியாதென அறிவித்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் ரணில் அரசாங்கத்திடம் மேலோங்கியுள்ளன.

இலங்கைத்தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஆண்டு எந்த ஒரு தேர்தலையும் நடத்த முடியாதென அதிகாரபூர்வமற்ற முறையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எம்.எப்.பின் நிதி வழங்கல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அவதானித்தே தேர்தல் பற்றித் தற்போதைக்குச் சிந்திக்க முடியாதென்ற கருத்தை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது போல் தெரிவிகிறது.

கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடியிருக்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் பரிந்துரைகளை அரசியலாக்கி குழப்ப வேண்டாம் என்றும், கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்குரிய பொதுப் பொறிமுறை ஒன்றை வகுத்துச் செயற்பட வேண்டுமெனவும் ஐ.எம்.எப் பிரதிநிதிகள் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக அதிகாரபூர்வமாக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐ.எம்.எப் உம் எதுவுமே கூறவில்லை. சந்திப்பு இடம்பெற்றதாக மாத்திரமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.எம்.எப். உடனான சந்திப்பில் ரணில் அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியதுடன் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என ஐ.எம்.எப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்ததாக சஜித் பிரேமதாச கூறியிருக்கிறார்.

அதாவது நிலையான அரசாங்கம் ஒன்று அமைய வேண்டிய அவசியத்தை சஜித் வலியுறுத்தியிருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டங்களை ஜே.வி.பியும் மறுக்கவில்லை.

ஆனால் பரிந்துரைகளைச் செயற்படுத்த நிலையான அரசாங்கம் தேவை என்று ஜே.வி.பி சுட்டிக்காட்டியிருக்கிறது. ஐ.எம்.எப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை உள்ளூர் கட்சி அரசியல் போட்டிகளுக்கு இடமளியாமல் பொருளாதார மீட்சிக்கான பொதுப் பொறிமுறை பற்றியே அதிகளவு கவனம் செலுத்தியிருக்கின்றனர்.

குறிப்பாகத் தமது பரிந்துரைகளை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்பது ஐ.எம்.எப் பிரதிநிதிகளின் எதிர்ப்பார்ப்பு. எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பின் பின்னணியில்தான் இலங்கை தொடர்ந்து ஆபத்தான பொருளாதாரப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே ஐ.எம்.எப் கருதுகின்றது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fund Facility – EFF) ஒரு பகுதியாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய மதிப்பாய்வின் படி இலங்கைத்தீவில் எதுவுமே சரியாக இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு மக்கள் தற்போது பொய்யான பாதுகாப்பு உணர்வை எதிர்கொள்வதாகக் கடன் வழங்கும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கருதுவதாக தமொனிங்(themorning) என்ற ஆங்கில செய்தித் தளம் கூறுகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான், EFF திட்டத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை மீளாய்வு செய்த ஐ.எம்.எப் பிரதிநிதிகள் இரண்டாவது தவணைக்குரிய நிதியை வழங்குவது பற்றி அறிவிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளனர் என்ற முடிவுக்கு வரலாம்.

வருமானம் ஈட்டும் இலக்குகள் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஆகிய இரண்டு முக்கிய பகுதிகள் குறித்து ஐ.எம்.எப் கவலை வெளியிட்டுள்ளது.

வருமானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான கலந்துரையாடல்கள் ஐ.எம்.எப் உடன் தற்போது நடந்து கொண்டிருக்கும் வேளையில், ரணில் இந்த மாத நடுப் பகுதியில் சீனாவுக்குப் பயணம் செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார்.

சீனாவிடம் இருந்து சில உறுதியான அர்ப்பணிப்புகளை ரணில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள சீனா உதவும் எனவும் ரணில் நம்புகிறார் போல் தெரிகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையான 330 மில்லியன் டொலர்கள் வழங்கப்படக்கூடிய நிலைமை இல்லை என்பதை அறிந்த பின்னணியிலேயே ரணில் சீனாவிடம் சரணடைந்திருக்க வேண்டும். முதற் கட்ட கணிப்புகளில் இருந்து 15% வருமானம் பற்றாக்குறையாகவுள்ளது.

வருமான நோக்கங்களை நிறைவேற்றுவது வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான மூத்த தூதுவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருமானத்தில் 12% என்ற நோக்கத்தை எட்டுவது மற்றும் அடுத்த ஆண்டு மற்றொரு பற்றாக்குறையைத் தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் சில புதிய வரி சீர்திருத்தங்களை ஐ.எம்.எப் பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் 2019 ஆம் ஆண்டு செய்யப்பட்ட வரி குறைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்கள் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கப் போதுமானதாக இல்லை எனவும் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவுடன் இலங்கையின் நிதி நிலைமை குறித்துப் பேசி மேலும் சில அலோசனைகளைப் பெற முடியுமென ஐ.எம்.எப் நம்புவதாக ரொய்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

ஐ.எம்.எப் பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர், ஜனாதிபதி ரணில் செப்ரெட்பர் 26 ஆம் திகதி ஜேர்மனிக்குச் சென்றிருந்தார்.அங்கு இடம்பெற்ற ‘பேர்லின் குளோபல் உரையாடலில்’ ஜனாதிபதி கலந்துகொண்டார். ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸை சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றிப் பேசியதுடன், இலங்கையின் வேலைத் திட்டத்தை விரைவுபடுத்த பரிஸ் கிளப்பின் உதவியைப் பெறுவதற்கு ஜேர்மன் அரசின் ஆதரவை கேட்டிருந்தார்.

ஆனால் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பரிஸ் கிளப் ஒக்டோபர் மாதக் கடைசி வரை கால அவகாசம் கேட்டுள்ளது.

பரிஸ் கிளப்பின் ஒத்துழைப்பை பெற்று இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ரணில் ஜேர்மனியில் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை.

ஆனாலும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை அணுகுவது குறித்தும் ரணில் பரிசீலிக்கிறார். இருந்தாலும் அந்த அணுகுமுறைகள் வெற்றியளிக்குமா என்று கூற இயலாது.

இப் பின்புலத்திலேதான் ரணில், இம்மாத நடுப்பகுதியில் சீனாவிற்குப் பயணம் செய்யவுள்ளாதாகத் தெரிகிறது. ஆனால் இங்கே வேடிக்கை என்னவென்றால் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ரணில் அக்கறை செலுத்தி வரும் நிலையில் அதற்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளன.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரால் இந்த மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்குவதில் சீனாவுக்குப் பெரும் பங்களிப்பு உண்டு.

அத்துடன் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தின் நிலைத் தன்மையிலும் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. பலதரப்பு நிதியளிப்பவர்கள் உட்பட இலங்கைக்கான அனைத்து கடன் வழங்குநர்களும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று சீனா எதிர்பார்க்கிறது.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தில் கடன் வழங்குநா்கள் ஏன் இணைய முடியாது என்ற கேள்வியையும் சீனா முன்வைத்திருக்கிறது. ஆனால் சீனாவைக் கடந்து மேற்கு மற்றும் ஐரோப்பியக் கடன் வழங்குநா்களிடம் இலங்கை வர வேண்டும் என்ற அழுத்தங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதையே அவதானிக்க முடிகிறது.

ரணில் கடும் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடுத்தமை என்பது பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே என ஹர்சா டி சில்வா கூறுகிறார். குறிப்பாக வங்கிகளில் வட்டி வீதங்கள் குறைக்கப்படுவதால் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பாதிக்கப்படுவார் என்ற வாதத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.

ஆகவே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளாக இருக்கலாம் அல்லது இந்தியா சீனாவாக இருக்கலாம் இலங்கைக்குக் கடன் கொடுத்து மீள முடியாத நிலைமைக்குள் கொண்டு செல்கின்றனா் என்பதை மறுக்க முடியாது. கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் வங்கிகளில் வட்டி வீதக் குறைப்பும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சகல சேவைகளுக்குமான வரி அதிகரிப்புகளும் பொது மக்களுக்குப் பாரிய ஆபத்து.

ஆனால் இலங்கைத்தீவின் வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் அரசாங்கத்திடமோ எதிர்க்கட்சிகளிடமோ இல்லை. வரி அதிகரிப்புகளைத் தவிர்த்து இலங்கைத்தீவின் வருமானத்தை அதிகரிக்க இனப் பிரச்சினை முதலில் தீர்க்கப்பட வேண்டும்.

நல்லிணக்கம் ஊடாகவே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் அவ்வப்போது பரிந்துரைத்தபோதும், அதனை ஏற்றுச் செயற்படுத்த வேண்டும் என்ற மன நிலை சிங்கள அரசியல் தலைவர்கள் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதனைப் பகிரங்கப்படுத்த சிங்கள ஆங்கில ஊடகங்களும் தயாராக இல்லை என்பதுதான் வேதனை.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்5 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15, ஞாயிற்று கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள சேர்ந்த பரணி நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...

indraya rasipalan 2 indraya rasipalan 2
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan மேஷம்   மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியான நாளாக இருக்கும்....