இலங்கை

நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை

Published

on

நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை

தனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது, தனக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது என்று முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தன்னுடைய பதவி விலகல் கடிதத்திலேயே வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றார் என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு நீதி கோரி இன்று கொழும்பில் சடத்தரணிகள் பெருமளவானோர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சாதாரணமாக நாங்கள் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு அதில் எங்களுக்கு இணக்கமில்லை என்று சொன்னால் நாங்கள் அதற்கு மேற்பட்ட நீதிமன்றத்தை நாடுவோம்.

ஆனால் ஒரு நீதிபதிக்கே நியாயம் கிட்டாமல், ஒரு நீதிபதி நீதித்துறையில் தான் வழங்கிய தீர்ப்புக்காக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு, தன்னுடைய செயல்களுக்காக உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார்.

தனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது, தனக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது என்று தன்னுடைய பதவி விலகல் கடிதத்திலேயே வெளிப்படையாகச் சொல்லி நாட்டை விட்டு போகின்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகையினால் தான் எங்களுடைய வழமையான எதிர்ப்பு முறையினை கைவிட்டு வீதிக்கு இறங்கி இன்று உச்சநீதிமன்றத்திற்கு முன்பாகவும், நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்பாகவும் ஒன்று திரண்டு இந்த கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கின்றோம்.

நீதிச் சேவைக்கு தொடர்ச்சியாக ஒரு அச்சுறுத்தல் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இது இப்போது ஒரு உச்ச நிலையை அடைந்திருக்கின்றது. ஆகையினால் உடனடியாக இதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த நிலை திருத்தப்பட வேண்டும்.

இல்லை என்று சொன்னால் சட்டத்தின் ஆட்சி என்பது இந்த நாட்டில், முன்னொரு காலத்திலே இருந்தது என்ற சரித்திரமாக மட்டும் இருக்குமே தவிர, சட்டத்தின் ஆட்சி என்றால் என்னவென்று கேட்கும் ஒரு சூழ்நிலை வந்துவிடும்.

ஆகையினால் இது சம்பந்தமாக உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எங்களுடைய கோஷமாக இருக்கின்றது என குறிப்பிட்டார்.

Exit mobile version