இலங்கை

மட்டக்களப்பில் பொலிஸார் தாக்குதலுக்கு கண்டனம்

Published

on

மட்டக்களப்பில் பொலிஸார் தாக்குதலுக்கு கண்டனம்

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியதற்காக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வன்மையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று 09.10.2023 ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி கருத்து தெரிவிக்கையிலே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்று (08.10.2023) மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாய்மார்கள் சென்றுள்ளார்கள்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாருக்கு மிருகத்தனமாக பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பாதிக்கப்பட்ட தரப்புக்களை பாதுகாக்கவேண்டிய பொலிஸ் அதிகாரிகளும் பொலிசாரும் புலனாய்வாளர்களும் அடித்து நொருக்குவதில் நியாயம் இல்லை. எங்களுக்கான நீதிக்காகத்தான் நாங்கள் தொடர்ச்சியாக போராடுகின்றோம்.

தமிழர்களின் உரிமைகள் எதுவும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. மேய்ச்சல் தரை போராட்டம் என்பது பொதுவான போராட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில்தான் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கான தீர்வினை கொடுக்காமல் மிலேச்சத்தனமாக பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version