இலங்கை

மட்டக்களப்பு போராட்டக் களத்தில் பொலிஸார் குவிப்பு

Published

on

மட்டக்களப்பு போராட்டக் களத்தில் பொலிஸார் குவிப்பு

மட்டக்களப்பில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள நிலையில், தங்களது மேய்ச்சற் தரைகளை கோரி மயிலத்தமடு மாதவணை மக்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டக் களத்தில் பெருமளவான பொலிஸார் தற்சமயம் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எத்தகைய அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடு மேய்ச்சற்தரை கோரிய பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டத்தினை நிறுத்தக் கோரியும் இனிவரும் நாட்களில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தினை நிறுத்தக் கோரியும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தடையுத்தரவானது மயிலத்தமடு கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டவர்களின் பெயர் குறிப்பிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையுத்தரவில், மேற்குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தினால் அல்லது ஊர்வலத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இதன் பிரகாரம் சந்திவெளி பொலிஸ் நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக பரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதால் கீழ்வரும் கட்டளையை மன்று பிறப்பிக்கின்றது.

மேற்படி உங்களால் உங்கள் மூலம் ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தக் கூடியவர்களால் உங்களுடன் சேர்ந்து தனிநபர், குழுக்களாக ஒன்றுகூடி 2023.10.07 மற்றும் 2023.10.08ம் திகதிகளில் சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி முருகன் கோவில் முன்னால் உள்ள வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாகவோ அல்லது பொதுமக்கள் பிரயாணிகள், அம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்காது சேதம் ஏற்படுத்துவதையோ பொதுமக்கள் கோவம் கொள்ளும் அளவில் செய்ய வேண்டாம் என இலங்கை தண்டனைத் சட்டக் கோவையிலுள்ள சரத்துக்களின் பிரகாரம் கட்டளை பிறப்பிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பண்ணையாளர்களின் போராட்டமானது தொடர்ந்து 23 நாட்களாக அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜத்தினைக் கருதி பொலிசாரினால் மன்றுக்கு அறிவித்து இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நீதிமன்றம் கட்டளையொன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி 2023.10.07 முதல் 2023.10.08 வரையான காலப்பகுதியில் சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குள் உள்ள சித்தாண்டி முருகன் ஆலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக செயற்படக் கூடாது என்றும், பொது மக்களின் சொத்துக்களுக்கோ, பிரயாணிகளுக்கோ, நோயாளர் காவு வண்டிகளுக்கோ எந்தவொரு இடையூறும் விளைவிக்கக்கூடாது எனவும் சித்தாண்டி மாட்டுப் பண்ணையாளர் அமைப்பினருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையிலேயே அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் இந்த நீதிமன்ற கட்டளையை வாசித்துக் காட்டியுள்ளனர்.

Exit mobile version