இலங்கை
தலைமன்னார் – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்
தலைமன்னார் – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கப்பல் நேற்றையதினம் நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததும் இன்றையதினம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய விஜயத்தின்போது அந்நாட்டு துறைமுக அதிகாரிகளுடனும் இதுதொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பேன் என துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ரிஷாத் பதியுதீன் எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரிஷாத் பதியுதீன் எம்பி தமது கேள்வியின் போது, ”தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையிலான கப்பல் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அண்மையில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்றவகையில் நீங்கள் மன்னார் பகுதிக்கு சென்று நேரடியாக நிலைமைகளை பார்வையிட்டீர்கள்.
அந்த வகையில் அது தொடர்பில் மேற்கொண்டுள்ள இருக்கும் முன்னோடி நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியிழுந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறியுள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தலைமன்னாரில் ஏற்கனவே காணப்பட்ட இறங்குதுறை உபகரணங்கள் மற்றும் பகுதிகள் அழிவடைந்துள்ளன.
அவை திருத்தப்பட வேண்டும். தேவையான உபகரணங்கள் தற்போது அங்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சுமார் ஆறு மாதங்களில் அந்த நடவடிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும். இந்த திட்டத்திற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 600 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான யோசனையை முன்வைத்துள்ளேன்.
அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி நான் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளேன். அங்கு கப்பல் துறை அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
இந்த கப்பல் சேவையை நடத்துவதில் அங்குள்ள தரப்பினரும் தயாராக வேண்டியுள்ளது அந்த நடவடிக்கைகள் முடிவுற்றதும் இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியும்.” என கூறியுள்ளார்.