இலங்கை
மலேசியா கொலை : மூன்று இலங்கையர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு
மலேசியா கொலை : மூன்று இலங்கையர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு
மலேசியாவின் செந்தூல் நகரில் இலங்கையர்கள் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினரை எதிர்வரும் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் அல்ல என்றும், அவர்கள் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் கோலாலம்பூர் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளார்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதும், விசாரணைகளை முடித்துக் கொள்வதற்காக தம்பதியரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், அதன்படி (30.09.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு இலங்கையர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்த கோலாலம்பூர் பொலிஸார், ஹுலு லங்காட் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த இரு இலங்கையர்களையும் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் உயிரிழந்த மூன்று இலங்கையர்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என மலேசியா பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் 24.09.2023 அன்று இந்த கொலைகள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் மேலும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சுமார் 02 நாட்களுக்கு முன்னர் மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அயலவர்களால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீட்டுக்குச் சென்ற பொலிஸார், தலையை மூடி கை கால்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
அவர்களில் இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.