இலங்கை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க மீது அவுஸ்திரேலிய பெண் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க மீது அவுஸ்திரேலிய பெண் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்
தன் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பெண், “இருவருக்கும் இடையில் முன்ஜென்ம பந்தம் இருந்திருக்கும்” என அன்பாக பேசிய நிலையில் தற்போது இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக கிரிக்கெட் வீரர் தனுஷ்க அவுஸ்திரேலிய நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க மீதான பாலியல் குற்றச்செயல் வழக்கு விசாரணைகள் இன்றைய தினமும் நடைபெற்றிருந்தது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனுஷ்க மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைகளின் இறுதி தினம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த யுவதியை ஏமாற்றி திருட்டுத்தனமாக, உறவின் போது ஆணுறையை அகற்றியதாக தனுஷ்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அரச தரப்பு வழக்குரைஞர் கேப்ரியல் ஸ்ட்ரீட்மன் (Gabrielle Steedman) இந்த குற்றச்சாட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற வகையில் உறவு கொள்வதற்கு தனுஷ்க முயற்சித்தார் எனவும் அதற்கு அந்த பெண் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாப்பான முறையில் உறவு கொள்வதாக பாசாங்கு செய்து பெண்ணை ஏமாற்றியதாக வழக்கறிஞர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் திகதி சிட்னியின் ஒபேரா பார் பகுதியில் இருவரும் சந்தித்து உள்ளனர். டேட்டிங் செயலி ஒன்றின் ஊடாக இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் பீட்சாவை இரவு உணவாகக் கொண்டு பெண்ணின் வீட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இருவருக்கும் இடையிலான உறவானது கடுமையானதாக அமைந்திருந்தது என வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
படுக்கை அறையில் வைத்து குறித்த பெண்ணை தனுஷ்க அறைந்ததாகவும் மூச்சுத் திணற செய்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண் தனுஷ்கவின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவும் இதனால் குறித்த பெண்ணால் எதனையும் செய்ய முடியாதிருந்தது எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உறவின் போது ஆணுறையை அகற்றுவதற்கு அதிக சந்தர்ப்பம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவின் போது தனுஷ்க பெண்ணின் விருப்பு வெறுப்புக்களை உதாசீனம் செய்து நடந்து கொண்டதாகவும் ரகசியமாக ஆணுறையை அகற்றியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டு குறித்து தனுஷ்கவின் சட்டத்தரணி மறுப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த பெண்ணின் சாட்சியத்தின் நம்பகத்தன்மை, நேர்மை குறித்து சந்தேகம் எழுவதாக தனுஷ்கவின் சட்டத்தரணி முருகன் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது குறித்த பெண் தங்கள் இருவருக்கும் இடையில் முன் ஜென்ம பந்தம் இருப்பதாக கூறியிருந்தார் எனவும் அவ்வளவு அன்னியோன்யமாக தனுஷ்கவுடன் அந்த பெண் பழகியிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில் உறவு பேணியதாகவும் பின் இந்தப் பெண் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த குற்றச்சாட்டை விசாரணை செய்த பொலிஸார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனவும் முதல் தடவை விசாரணை குறித்த தகவல்கள் பதியப்பட்டு இருக்கவில்லை எனவும் சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவினால் அளிக்கப்பட்ட சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். மேலும் எதிர்வரும் 28ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.