இலங்கை

கொழும்பு ஹோட்டல் கட்டணங்கள் தொடர்பில் வர்த்தமானி

Published

on

கொழும்பு ஹோட்டல் கட்டணங்கள் தொடர்பில் வர்த்தமானி

கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இந்த விலைகளை அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான சுற்றுலா ஹோட்டல் அறைக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்து நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 100 அமெரிக்க டொலர்களும் நான்கு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 75 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 50 அமெரிக்க டொலர்களும், இரண்டு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 35 அமெரிக்க டொலர்களும், ஒரு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 20 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த விலைகள் 24 மணிநேர காலத்திற்கு செல்லுபடியாகும். மேலும் சேவைக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் அல்லது வழங்கப்பட்ட பிற சேவைகள் அல்லது வசதிகளுக்கான கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்காது.

இதற்கு மேலதிகமாக ஹோட்டல்களில் வசிப்பவர்களுக்கான உணவு விலைகளையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, ஐந்து நட்சத்திர சுற்றுலா விடுதியில் ஒருவருக்கு காலை உணவாக 10 அமெரிக்க டொலர்களும், மதிய உணவிற்கு 15 அமெரிக்க டொலர்களும், இரவு உணவிற்கு 17 அமெரிக்க டொலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு, காலை உணவுக்கு 9 அமெரிக்க டொலர்கள், மதிய உணவுக்கு 14 அமெரிக்க டொலர்கள் மற்றும் இரவு உணவிற்கு 16 அமெரிக்க டொலர்கள் என விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Exit mobile version