இலங்கை
மீண்டும் மறுசீரமைக்கப்படவுள்ள அரச நிறுவனங்கள்
மீண்டும் மறுசீரமைக்கப்படவுள்ள அரச நிறுவனங்கள்
சுற்றாடல் தொடர்பில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரின் செயற்கை கடற்கரையில் நேற்று (16.09.2023) முற்பகல் நடைபெற்ற கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சூழல் தொடர்பான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைக்க நாம் தீர்மானித்துள்ளோம். அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட உள்ளது. இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்கு பின், தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்தவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதற்கு இணையாக ஜனாதிபதி, இதற்கான செயலணி ஒன்றை நியமிக்கவும் உள்ளார். வேலைத்திட்டங்களை தயாரித்தல், செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல் அதன் பொறுப்பாகும்.
மக்களை முறையாகத் தெளிவுபடுத்துவதற்கும், நிலைபேறான திட்டங்களை செயல்படுத்தி சூழல் மாசடைவதைக் குறைப்பதற்கு நாம் இந்தத் திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கின்றோம்.
சூழல் நமக்கு மிகவும் முக்கியமானது. நாம் சூழலை பாதுகாக்காவிட்டால் அடுத்த தலைமுறை இந்த சுற்றுச்சூழலை இழக்க நேரிடும்.
மேலும், சூழலை பாதுகாப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தின் நிலைத்தல் தன்மையை உறுதி செய்ய முடியும். அந்த அனைத்து பொறுப்புக்களையும் அரசாங்கத்திடம் மாத்திரம் ஒப்படைக்க முடியாது.
சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. அந்த பொறுப்பை மக்களுக்குத் தெளிவுபடுத்த சரியான வேலைத்திட்டம் இருக்க வேண்டும்.
எனவே, அந்தப் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.