இலங்கை

சனல் 4 ஆவணப்பட விசாரணைக்குழு ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியீடு

Published

on

சனல் 4 ஆவணப்பட விசாரணைக்குழு ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியீடு

உயிர்த்த ஞாயிறு 21 தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளுக்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில், ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் ஏ.சி.எம்.ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சூசா ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ தொலைக்காட்சியினால் ஆவணப்படமொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த காணொளியில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்காக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பிள்ளையானின் ஊடக செயலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானா தெரிவித்திருந்தார்.

இதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலேவுக்கும் தாக்குதல்தாரிகளுக்கும் இடையே தாம் சந்திப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தமக்கு தாக்குதல்தாரிகளை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு, தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version