இலங்கை
இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு சாத்தியம்
இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு சாத்தியம்
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் உண்டு என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன் தினம் (14.09.2023) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் சனல் 4 செய்திச்சேவையினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன் குறித்த ஆவணப்படத்தின் பின்னணி மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத்தன்மை என்பன குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டிருப்பதனால் இதனை சர்வதேச குற்றமாகக் கருதி சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பெத் வான் ஸ்காக், உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் உண்டு எனவும், இதுகுறித்து தாம் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவா சென்றிருந்த எம்.ஏ.சுமந்திரன், அதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையிலேயே பெத் வான் ஸ்காக் உடன் குறித்த சந்திப்பும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.