இலங்கை

நல்லூர் திருவிழா சனநெரிசலில் சிக்கி சிலர் மயக்க நிலை

Published

on

நல்லூர் திருவிழா சனநெரிசலில் சிக்கி சிலர் மயக்க நிலை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் இரவு ஏற்பட்ட சனநெரிசலால் பக்தர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நல்லூர் சப்பரத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் பக்தர்கள் வருகை தரவும் போவதற்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்ட நிலையில் மற்றைய சிவன்கோவில் பாதையிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக விலத்தப்படாத நிலையில் சனநெரிசல் அதிகரித்து பலர் மூச்சுத்திணறலால் அவதியுற்றதுடன் நோயாளர் காவு வண்டி வருவதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திய விஷமிகள் அங்க சேஸ்டையில் ஈடுபட்டதுடன்,திருடர்கள் பெருமளவு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதுடன் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் பெருமளவான நகைகளும் குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு உடனடியாக கோவில் அருகில் ஆலயத்தினரால் போடப்பட்ட வீதித்தடைகளை தளர்த்தி பக்தர்கள் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர்.

பருத்தித்துறை வீதியை மறித்து நல்லூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினால் இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்ட பாதையும் இதன்போது பக்தர்களால் உடைக்கப்பட்டது.

சப்பரத் திருவிழாவிலேயே இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டால் தேர்த்திருவிழாவில் இந்நிலை மோசமாகும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததுடன் இது தொடர்பில் யாழ் மாநகர சபை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version