இலங்கை
சனல் 4 ஊடாக இராணுவத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்க முயற்சி!
சனல் 4 ஊடாக இராணுவத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்க முயற்சி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனது பிரதான இலக்கினை அடையவுள்ளதாக தேசிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டை பகுதியில் உள்ள சுதந்திர தேசிய முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடக செயலாளராக பணிபுரிந்த அசாத் மௌலான, முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா ஆகியோர் புகலிட கோரிக்கைக்காக நாட்டை சர்வதேச மட்டத்தில் காட்டிக்கொடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை கொண்டு ஒரு தரப்பினர் ராஜபக்சர்களை பழிவாங்க முயற்சிப்பதாகவும்,ராஜபக்சக்களை பழிவாங்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டின் புலனாய்வு பிரிவு மற்றும் இராணுவத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்க ஒரு தரப்பினர் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் காணொளி வெளியாகியுள்ளது.
சனல் 4 காணொளி வெளியிட்டவுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இதனையே வலியுறுத்தி வருகின்றார்.
ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பங்களிப்பு விசாரணை அவசியம்’ என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.