இலங்கை

அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை

Published

on

அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை

இன்று (12) நள்ளிரவு முதல் தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இதன்மூலம் நாளை (13.09.2023) முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடருந்து இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினத்தின் (12.09.2023) இதுவரையான 10 இற்கும் அதிகமான அலுவலக மற்றும் ஏனைய தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் சேவைகளை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 வருடங்களாக நடைபெறாத தரம் உயர்வை விரைவுபடுத்துமாறு விடப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்றிரவு தொடருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கும், தொடருந்து முகாமையாளருக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமையினால், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தொடருந்து இயக்குநர்கள் சங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version