இலங்கை
கோட்டாபயவின் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் உயிர் தியாகம் செய்வார்களா?
கோட்டாபயவின் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் உயிர் தியாகம் செய்வார்களா?
பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கபபட்டிருந்த நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் தங்களது உயிரை தியாகம் செய்வார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்களின் திணிப்பு என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள். இருப்பினும் தங்களின் அரசியல் நோக்கத்துக்காக இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை நாடு என்ற ரீதியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தால் எவராலும் எதுவும் செயய முடியாது.
கோட்டபய ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் தமது உயிரை தியாகம் செய்தார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை காட்டிக் கொடுத்தது. அடிப்படைவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னிலை வகித்தார்கள்.
பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கபபட்டிருந்த நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காக அவர் கைது செய்யவில்லை.
குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் 10 அடிப்படைவாத சம்பவங்கள் பதிவாகின. வனாத்தவில்லு பகுதியில் வெடிப்பொருட்கள் களஞ்சியசாலை கண்டுப்பிடிக்கப்பட்டது.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து நல்லாட்சி அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குலை தடுத்திருக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள், அமைச்சரவையின் உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த அரசாங்கத்தின் உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களுடன் இணக்கமாக செயற்பட்டார். ஆகவே குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.