இலங்கை
நல்லிணக்க செயன்முறையின் அடிப்படை பொறுப்புக்கூறலேயாகும்!
நல்லிணக்க செயன்முறையின் அடிப்படை பொறுப்புக்கூறலேயாகும்!
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியல்தீர்வை வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதியினால் சகல தரப்பினருடனும் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் வரவேற்கத்தக்கவை ஆகும்.
இருப்பினும் நல்லிணக்கத்தை நோக்கிய எந்தவொரு நியாயமான செயன்முறையினதும் முக்கிய கூறாக பொறுப்புக்கூறலே காணப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதன் தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாகத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு…
நாடு முகங்கொடுத்திருக்கும் தீவிர பொருளாதார நெருக்கடியின் விளைவாகத் தோற்றம் பெற்றுள்ள உணவுப் பாதுகாப்பின்மை நிலை வாழ்வதற்கான உரிமை மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட மனித உரிமைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி இது சிறுவர்கள் மத்தியிலான மந்தபோசணை குறைபாடு அதிகரிப்பதற்கும், பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதற்கும் வழிகோரியுள்ளது.
அடுத்தாக கடந்த 2020 ஒக்டோபர் மாதம் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் மிகவும் வலுவான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மீள அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்திருத்தமானது முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று கடந்த மேமாதம் 26 ஆம் திகதி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் அந்த ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை குறித்த கேள்வியைத் தோற்றுவித்தது.
அதுமாத்திரமன்றி அதன் உள்ளடக்கத்தை ஒத்த சரத்துக்களே சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றிலும் உள்ளடங்கியிருப்பதுடன், அச்சட்டங்கள் அவ்வப்போது ஏதேச்சதிகாரமான முறையில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் பயங்கரவாதத்தடை சட்டத்துக்குப் பதிலாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அச்சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டு, அதுபற்றிய மேலதிக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதுடன், கடந்த ஓகஸ்ட் மாதம் அரசாங்கத்தின் தரவுகளின்படி பயங்கரவாதத்தடை சட்டத்தின்கீழ் 21 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று ஆர்ப்பாட்டங்களின்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்தல், சட்ட அமுலாக்கம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வளித்தல், சோதனைச்சாவடிகளில் சோதனையிடல் உள்ளிட்ட பொதுமக்களுடன் தொடர்புடைய பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவது கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், வட-கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மீதான கண்காணிப்புக்களும், ஒடுக்குமுறைகளும், மீறல்களும் தொடர்கின்றன.
பொலிஸ் காவலின் கீழ் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் மரணங்களும் புதிதாகப் பதிவாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடியை சீரமைப்பதற்கு அவசியமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை அவ்வாறு மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்கள் சமூகத்தின் குறித்தவொரு பிரிவினரை மாத்திரம் சமத்துவமற்ற முறையில் இலக்குவைப்பதாக அமையக்கூடாது.
மேலும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வின் மூலம் அரசியல்தீர்வை வழங்குவது குறித்து சகல தரப்பினருடனும் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் வரவேற்கத்தக்கவை என்றபோதிலும், நல்லிணக்கத்தை நோக்கிய எந்தவொரு நியாயமான செயன்முறையினதும் முக்கிய கூறாக பொறுப்புக்கூறலே காணப்படுகின்றது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.