இலங்கை
சனல் 4 காணொளி விவகாரம் தொடர்பில் வெளியான வதந்தி
சனல் 4 காணொளி விவகாரம் தொடர்பில் வெளியான வதந்தி
இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 காணொளி இதுவரை நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சனல் 4 இணையத்தளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் சர்ச்சைக்குரிய காணொளியினை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் குறித்த காணொளி இதுவரை நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இணையதளத்தில் வெளியிடப்பட்ட காணொளி நீக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஆவணப்படத்தை முன்னெடுத்த Basement_Films நிறுவனர் பென் டி பியர், காணொளி சனல் 4 இல் உள்ளது என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) செய்தித்தொடர்பாளர் அசாத் மௌலானா, சனல் 4 இல் முன்னிலையாகி, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பப்பட்ட சனல் 4 ஆவணப்படத்தில், கிழக்கில் சந்திப்பு இடம்பெற்றதாகவும், தானும் கலந்துகொண்டதாகவும் மௌலானா குற்றம் சுமத்தியிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சல்லே ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மௌலானா வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளதோடு சுரேஷ் சாலேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.