இலங்கை

சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில்

Published

on

சனல் 4 தற்போது வெளியிட்டுள்ள காணொளியானது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளிகளைப் போன்று பொய்களைக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

2019ஆம் இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தி, பிரித்தானியாவில் உள்ள சனல் 4 ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தப்படத்தில், தற்போதைய இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் பணியாற்றிய ஆசாத் மௌலானா, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் உருவாக்கிய குழு, பிள்ளையான் அவர்கள் இணைந்து தீட்டிய சதித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை இந்த காணொளியில் அம்பலப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில், குறித்த காணொளி இலங்கை அரசியலில் பரபரப்பான நிலையை தோற்றுவித்துள்ளதுடன், இது குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சனல் 4இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ச குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும். இந்த வீடியோ சனல் 4 வெளியிட்ட முன்னைய வீடியோ போன்று பொய்களை கொண்டது.

என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது.

தனிப்பட்ட நபர்கள் சிலர் எனக்கு எதிராக அரசியல் நோக்கங்களை கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போதிலும் நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கத்தோலிக்க திருச்சபைக்கு உதவுவதற்காக அனைத்தையும் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version