இலங்கை
24 மணித்தியாளங்களில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் விபத்தில் பலி
24 மணித்தியாளங்களில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் விபத்தில் பலி
நாட்டில் கடந்த 24 மணித்தியாளங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பாடசாலை மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்மடுல்ல நோனாகம பிரதான வீதியில் 09 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நேற்று (05.09.2023) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹவத்தையிலிருந்து மாதம்பே நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் சறுக்கிக் கவிழ்ந்ததில், பின்னால் அமர்ந்து சென்ற மாணவன் தூக்கி வீசப்பட்டு எதிர்திசையில் வந்த வானில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் மாணவன் படுகாயமடைந்துள்ளதுடன், கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளான்.
யக்கஹஹெல்ல, கஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடவத்தை வெளி சுற்றுவட்ட வீதியில் கணேமுல்ல சுற்றுவட்டத்திற்கு அருகில் பாதசாரி கடவையில் பயணித்த ஒருவர் மீது முச்சக்கர வண்டி மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கந்தளாய் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை லங்கா படுன வீதியின் முட்டிச்சேன பிரதேசத்தில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாவடிச்சேனையில் இருந்து லங்கா படுன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து கொங்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.